முதலில் பொதுச்சுடரினை மாவீரன் கதிர்ச்செல்வன் அவர்களின் சகோதரன் திரு.ரஜனி ஏற்றிவைத்தார். தொடர்ந்து எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்காகவும் , மற்றும் அனைத்துப் பொது மக்களுக்காகவும் தேசிய நினைவெழுச்சி நாளில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதுடன் மலர் வணக்கத்தையும் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைத்துப் போராளிகளுக்காகவும் பொது மக்களுக்காகவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அயர்லாந்தில் இருந்து தாயகத்திற்குச் சென்று வந்த அருட்தந்தை அங்கு எமது மக்கள் படும் அவலத்தை நேரில் கண்டு அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து அந்த அனுபவங்களை எடுத்துக் கூறினார். அவர் தனது உரையில் எமது தாயக விடிவிற்காக வித்தான மாவீரர்களையும் மற்றும் படுகொலை செய்யப்பட பொது மக்களையும் அவர்கள் செய்த தியாகங்களையும் எடுத்துக் கூறியதுடன் தற்பொழுது இலங்கை அரசானது மாவீரர்களின் கல்லறைகளை இடித்து அந்த மாவீரர் நினைவாலயங்களை அழிப்பதை மிகக் கவலையுடன் எடுத்து கூறியதுடன் எமது மக்களுக்கு இலங்கை அரசினால் இழைக்கப்படும் துரோகச் செயல்களையும் எடுத்துக்கூறினார், அத்துடன் வவுனியா இடைத்தங்கல் முகாமில் எமது மக்கள்படும் துயரங்களையும் எடுத்துரைத்ததுடன் தற்பொழுது அங்கு வாழும் மக்களின் உடனடித்தேவையையும் விபரித்துக் கூறியதுடன் அவர்களுக்கு உதவுவது எமது கடமையாகும் எனவும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து உணர்வுமிக்க மாவீரர் கவிதை மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து தேசிய நினைவெழுச்சி நாள் ஒருங்கமைப்பாளர் திரு. காண்டீபன், எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும் அவர்கள் செய்த தியாகங்களையும் மற்றும் அவர்களை பெற்றெடுத்த குடும்பத்தாரையும் அத்துடன் இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் பற்றி எடுத்துக்கூறியதுடன், புலம்பெயர்ந்து இங்கு வாழும் நாங்கள் எமது மக்களுக்காகவும், எமது தேச விடுதலைக்காகவும் குரல் எழுப்புவதுடன் அவர்களுக்கு உதவுவது எமது தலையாய கடமையாகும் எனக் கூறியதுடன் மற்றும் தங்கள் சொந்த இடங்களுக்கு மீளச்சென்ற மக்களுக்கு எந்த வழியில் உதவமுடியும் எனக் கூறியதுடன் இன்றைய தினத்தில் நாங்கள் சில குடும்பங்களை பொறுப்பு எடுத்து அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு இயலுமான உதவிகளை செய்வதற்கு உறுதியுரை எடுத்து அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த அரங்கத்தில் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது, இந்த ஓவியங்களானது வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் பொழுது அங்கு இருந்து பின்னர் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கி இருக்கும் ஓவியரால் வரையப்பட்ட ஓவியங்களாகும். தொடர்ந்து உணர்வுமிக்க மாவீரர் கானங்கள் அரங்கத்தில் ஒலிக்கவிடப்பட்டது. இறுதியாக நன்றி உரையினை செல்வி. வதனி அவர்கள் நிகழ்த்தினார்கள். இந்த தேசிய நினைவெழுச்சி நாள் ஒன்று கூடலில் பலதரப்பட்ட வயதினரும் மற்றும் பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
No Response to "அயர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உண்ர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது."
Post a Comment