தரை முதல் கடல் ஆகாயம் வரையிலும் வீர காவியங்கள் பல படைத்து காவிய நாயகர்களான எம்மவர்கள் துயில் கொள்ளும் துயிலும் இல்லங்கள் எம் ஈழ தேசத்திலே சிங்களக் காடையர்களினால் அழிக்கப்பட்டாலும். எம் இதயத்திலும் உணர்விலும் இரத்தத்திலும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாவீரர்களுக்கு இந்நாளைச் சமர்ப்பணம் செய்வதும் எமது வீரர்களை நினைவு கூர்வதும் தமிழர்களாகிய எமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையே.
இன்றைய எம் நிகழ்வுகள் ஈராயிரம் மக்கள் புடைசூழ மாவீரன் நவாசின் தாய் பொதுச்சுடர் ஏற்ற, அவுஸ்திரேலியக் கொடியை இளையோர் அமைப்பைச் சார்ந்த வசந்த் அவர்கள் ஏற்ற, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சிட்னிப் பொறுப்பாளர் ஜனகன் எமது தேசியக் கொடியினை ஏற்ற ஆரம்பமானது. தொடர் நிகழ்வாக தம் இன்னுயிரை எமக்காகவும் எம்மொழிக்காகவும் மண்மீட்புப் போரில் தியாகம் செய்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் அகவணக்கமும், ஈகைச் சுடரை மாவீரர் புவிராஜின் தாய் ஏற்ற மாவீரர்கள் புகைப்படங்களுக்கு மாவீரர் பெற்றோர், உறவினர்களின் கண்ணீர் மல்கிய அஞ்சலியும் பொது மக்களின் அஞ்சலியும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. மாவீரர் நாள் செய்தி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சிட்னிப் பொறுப்பாளர் ஜனகன் அவர்கள் வழங்கினார். தமிழ் உணர்வாளர் திரு. மயில்வாகனம் தனபாலசிங்கம் அவர்களின் சமகால பார்வையின் உரையும் உள்ளத்தை மீண்டும் தீண்டி விட்டது.
தொடர் கலை நிகழ்வாக மாவீரர் புகழ் பாடும் பல நிகழ்வுகள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தானது. “யாழினி” குறும்படம் நேற்றைய இன்றைய எம் தமிழர் வாழ்வின் (அகதி, இடப்பெயர்வு) வழித்தடத்தை மீண்டும் இரைமீட்டது. சிட்னி இளைஞர் அமைப்பின் நாட்புய நாடக நடனம் இன்றைய எம் மாவீரர் நிகழ்வை அலங்கரித்தன.
இன்றைய எம் ஈழத்து மக்களின் சொல்லொணா துயர் நிறைந்த வாழ்வை மறைத்து உலகிற்கு கொடிய சிங்கள ராஜபக்ச அரசு செய்யும் பொய்ப்பிரசாரமும் இதை நம்பும் உலக நாடுகளின் வளமையும் அதையும் தாண்டி எம் புலம்பெயர் மக்கள் அவர்கள்மேற் கொண்ட முரணான கருத்துக்களும் உண்மைக்குப் புறம்பானதே. எம் மக்கள் இன்றும் முள் கம்பிகளின் பின் உணர்வுகள் அற்ற நடைப் பிணங்களாக பேச்சுச் சுதந்திரம், வாழ்க்கைச் சுதந்திரம் அற்று வெளியே சிரித்த முகத்துடன் வாழ்வதற்கு எந்த உதவியும் அற்று உணவும் இல்லிடமும் அற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியை இளைஞர்களின் நாட்டிய நாடகம் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இறுதி நிகழ்வாக அமைதியான முறையில் கொடிகள் இறக்கப்பட்டு இன்றைய எம் மாவீரர் நாள் நெஞ்சிலே சுமைகளுடன் தாயகக் கனவுடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.
No Response to "அவுஸ்திரேலியாவில் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வு"
Post a Comment